முழு அடைப்பு போராட்டம், பிரச்சார இயக்கம் துவக்கம்

1672பார்த்தது
முழு அடைப்பு போராட்டம், பிரச்சார இயக்கம் துவக்கம்
காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் குறித்து தஞ்சாவூரில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு மாத வாரியாக கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும், கர்நாடகத்தில் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூரில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதன்படி, தஞ்சை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், வணிகர் சங்கங்கள், நகை கடை உரிமையாளர் சங்கம், துணிக்கடை உரிமையாளர்கள் சங்கம், திலகர் திடல் மாலை நேர காய்கறி சந்தை நிர்வாகிகளை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் என். வி. கண்ணன் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சோ. பாஸ்கர், பி. செந்தில்குமார், ஆர். ராமச்சந்திரன், கோவிந்தராஜ், வெ. சேவையா, துரை. மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி