தஞ்சாவூரில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-ஆவது மாநாட்டுக்கான இலச்சினை சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. நாகப்பட்டினத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-ஆவது தேசிய மாநாடு ஏப்ரல் 15, 16, 17 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான இலச்சினை தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில், மாநாட்டுக்கான இலச்சினையை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, மேயர் சண். ராமநாதன் ஆகியோர் வெளியிட அதை சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் த. இந்திரஜித், விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் மு. சேரன் பெற்றுக்கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் முத்து. உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் பி. எஸ். மாசிலாமணி வரவேற்றார். நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலரும், அகில இந்திய மாநாட்டின் பொருளாளருமான சிவகுருமணி நன்றி கூறினார்.