தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை 4 இயந்திரங்களில் பேட்டரிகள் பழுதானதால், வாக்காளர் ஒப்புகை சீட்டு மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் முதல் சுற்றில் ஒரு இயந்திரமும், 13 -ஆவது சுற்றில் ஒரு இயந்திரமும் பழுதானது. இதனால் அந்த இரு இயந்திரங்களை எண்ணுவது தள்ளி வைக்கப்பட்டது.
இதேபோல பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டு இயந்திரத்தில் பேட்டரி குறைந்து விட்டதால் பழுது ஏற்பட்டது. மற்ற பேட்டரிகள் பொருத்தியும் அந்த இயந்திரங்கள் இயக்க முடியவில்லை. இதனால் அந்த இயந்திரங்களை கடைசியாக எண்ண முடிவு செய்யப்பட்டது.
பின்னர் பிற்பகலுக்கு பிறகு பழுதான நான்கு இயந்திரங்களுக்கு பதில், அந்த இயந்திரங்களோடு உள்ள, வாக்காளர் ஒப்புகை சீட்டை எண்ணி அதன் முடிவுகளை பின்னர் அறிவித்தனர்.