100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு, சாதாரணக் கூட்டம் ஆவணம் கூட்ட அரங்கில், தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ. மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். மனோகரன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, உறுப்பினர்கள் மதிவாணன், சுந்தர், அண்ணாதுரை, ராஜலட்சுமி ராஜ்குமார், பாக்கியம் முத்துவேல், அமிர்தவல்லி கோவிந்தராஜ் பெரியநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் அண்ணாதுரை பேசும்போது, "காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை நடத்த உள்ள முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.
உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அலுவலர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். நிறைவாக, ஒன்றியக் குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் நிறைவு செய்து வைத்து பேசினார்.