தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் இருந்து துறவிக்காடு செல்லும் பிரதான சாலையின் ஓரங்களில் அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை தொடர்ந்து இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர். அதேபோல் கட்டாச்சி குண்டு குளக்கரை
பகுதி, துறவிக்காடு ஆற்றுப்பாலத்தில் இருந்து புனல்வாசல் செல்லும் புதுப்பட்டினம் 1-ம் நம்பர் கிளை வாய்க்கால் சாலையோரம் மற்றும் திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.