தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளில் அலையாத்தி காடுகளை வளர்க்க மாவட்ட வனத்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்த மாவட்டம் வன அலுவலர் அகில் தம்பி பிரபல தமிழ் தினசரிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாக் ஜல சந்தி பகுதியில் கடல் பசு அதிக அளவில் காணப்படுகிறது. அரிய வகை உயிரினமான கடல் பசுவை பாதுகாக்க, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்துள்ள மனோரா பகுதியில் கடல் பசு பாதுகாப்பு மையம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் வந்து பார்க்கும் வகையில் தங்குமிடம், உணவகம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் கடலோர பணிகள் மேம்பாட்டு திட்டத்தில் மொத்தம் ரூ. 80 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் வனப்பரப்பை அதிகரிக்கும் பொருட்டு மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இயற்கை பேரழிவுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் அலையாத்தி காடுகள் அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.