தடைகாலத்தில் சேதமடையும் படகுகளை பராமரிக்க வட்டி இல்லா கடன்

66பார்த்தது
தடைகாலத்தில் சேதமடையும் படகுகளை பராமரிக்க வட்டி இல்லா கடன்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. தடைக்காலம் முடிந்து தொழிலுக்கு சென்றால் ஒரு வார காலம் மட்டும் மீன் அதிகம் கிடைக்கும்.
பிறகு தொழில் நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தடைக்காலத்தில் மீனவர்களுக்குவட்டி இல்லாத கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் தாஜுதீன் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு வழங்கும் டீசலுக்கு முழு வரிவிலக்கு அளிக்கவேண்டும். மீன்பிடி தடைக்காலம் கோடை காலத்தில் வருவதால் படகுகள் காய்ந்து அதிக அளவில் சேதமடைகிறது.  
படகுகளை பராமரித்து மீண்டும் தொழிலுக்கு எடுக்கும் போது ஒரு படகுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவு செய்து படகை தொழிலுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. மேலும் படகு பராமரிப்பு செலவுக்காக வட்டியில்லாத கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தடைக்காலத்தை நவம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள மாதத்தில் நடைமுறைப்படுத்தினால் இயற்கை சீற்றத்திலிருந்து மீனவர்களையும், படகுகளையும் பாதுகாக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

தொடர்புடைய செய்தி