தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக, மொழிப்புல அவையத்தில் இலக்கியத்துறையின் சார்பாக, திங்கள்கிழமை சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாணவர்களைக் கவிஞராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் தனது படைப்பாற்றலில் சிறந்து விளங்கிட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கியத்துறைப் பேராசிரியர் முனைவர் பெ. இளையாப்பிள்ளை நோக்கவுரை வழங்கினார்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர்(பொ), சி. தியாகராஜன் தலைமை வகித்தார். சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழு உறுப்பினரும், சமூகத்தின் அவலங்களைத் தன் எழுத்துக்களால் மக்களிடையே கொண்டு சேர்க்கும் எழுத்தாளருமான சுப்பரபாரதிமணியன், சிறுகதை, நாவல்களின் போக்கு, வாழ்க்கை அனுபவத்தைக் கதையாக மாற்றும் முறைமை மற்றும் தனது நாவல் படைப்புகளின் அனுபவம் போன்றவைக் குறித்தும் மாணவர்களிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைப்பேராசிரியர்(ஓய்வு) க. அன்பழகன் கலந்து கொண்டார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை மற்றும் பிற துறை பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ. தேவி வரவேற்றார். நிகழ்வின் நிறைவாக முதுகலை இரண்டாமாண்டு மாணவன் சே. முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார். முதுகலை இரண்டாமாண்டு மாணவி செ. செந்தமிழ் தொகுத்து வழங்கினார்.