கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் சிறுவர்கள் கிணற்றில் ஆட்டம் போட்டு குளித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலத்தில் இருப்பது போல் வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. மாலை நேரத்திற்கு பின்பு அதிக நடமாட்டம் உள்ளது வெயிலின் வாட்டத்தை போக்க மின்விசிறியில், ஏசியிலும் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் குளிர்பான கடைகளில் சர்பத், இளநீர், ஜூஸ் அருந்தி தங்கள் வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. பகலில் அனல் காற்று வீசுகிறது. 100 டிகிரி தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. இதனால் தலை மற்றும் முகத்தை துணியால் மூடிக்கொண்டு குடை பிடித்துக் கொண்டு பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். வெயில் தாக்கம் காரணமாக சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் இளநீர், கரும்புச்சாறு, மோர், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் மற்றும் பழச்சாறுகளை வாங்கி மக்கள் தங்கள் தாகம் தீர்த்துக் கொள்கின்றனர். சிறுவர்கள் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கிணறுகளில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.