தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அதிமுக சார்பில் பேராவூரணி வேதாந்தம் திடலில் வெள்ளிக்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சி.வி.சேகர் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கல்யாணோடை துரை செந்தில், மாநில விவசாய அணி இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான மா.கோவிந்தராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக அதிமுக நகரச் செயலர் எம்.எஸ்.நீலகண்டன் வரவேற்றார். பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவி.இளங்கோ நன்றி கூறினார். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.