டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நாளை நீர் திறக்கப்பட உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கணமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் இருந்து உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருதியும், டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகவும் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கத்திலும்
நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து அமைச்சர் கே. என். நேரு நீரை திறந்துவிட்டார். இந்த நீர் இன்று இரவு கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பாசனத்தை
மேற்கொள்ள ஏதுவாக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் கொள்ளிடம் ஆறுகளில் நாளை காலை நீர் திறந்து விடப்பட உள்ளது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்பர். ஏற்பாடுகளை நீர்வள ஆதாரத் துறையினர் செய்து வருகின்றனர்.