பட்டுக்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குனர் ராகினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தென்னையினை அதிக பரப்பளவில் முறையான பராமரிப்புடன் சாகுபடி செய்யும் விவசாயிகள், தென்னை நாற்று பண்ணை நிறுவி, தேவைக்கேற்ப தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமாக கூடுதல் வருமானம் பெற இயலும்.
அந்த வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் தென்னையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் குறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பகுதிக்கேற்ற ரகங்கள், தாய்மரங்கள், தரமான நெற்றுகள் ஆகியவற்றை தேர்வு செய்தல், நெற்றுகளை பதனிடும் வழிமுறைகள், நாற்றங்கால் அமைத்தல், நாற்று உற்பத்தியில் உர, நோய், பூச்சி மேலாண்மை மற்றும் தென்னையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் குறித்த தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படும். எனவே பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஓரத்தநாடு, திருவோணம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தை சார்ந்த தென்னை விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.