தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருமகளூர் பேரூராட்சி வலையன்வயல் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சிராப்பள்ளி கோட்டம் மூலம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 168 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி ரூ. 1596 லட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வருகிறது. அதனைப் பார்வையிட்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் லெனின் நகர் பகுதியில் சுடுகாடு அமைக்கும் பணியையும், பெருமகளூர் கடைவீதியில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பழைய சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை. ரவிச்சந்திரன், பெருமகளூர் நகர செயலாளர் மாரிமுத்து, பேரூராட்சி தலைவர் சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ், மாவட்டப் பிரதிநிதி கே. சீனிவாசன், ராஜேந்திரன், என். போத்தியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.