தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் ஓவிய - சிற்பக் கலைக்காட்சி இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின், தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் தஞ்சாவூர் மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், களக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஓவிய, சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், பாரம்பரிய ஓவியம், தத்துவ ஓவியம், நவீன ஓவியம் என 125க்கும் அதிகமான ஓவியங்களும், பாரம்பரிய சிற்பங்கள், வெண்கலச் சிற்பங்கள், தத்துவ சிற்பங்கள், நவீன சிற்பங்கள் என 25க்கும் மேற்பட்ட சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. மாவட்ட சுற்றுலா அலுவலர் அ. சங்கர் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் த. செந்தில்குமார், தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவர் செ. கற்பகம், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இதில், சிறந்த ஓவிய சிற்பக் கலைப் படைப்புகளுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் 7 கலைஞர்களுக்கும், இரண்டாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதம் 7 கலைஞர்களுக்கும், மூன்றாவது பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதம் 7 கலைஞர்களுக்கும் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.