தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கார்காவயல், கூத்தாடிவயல் மற்றும் பண்ணவயல் கிராம கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கல்வி மற்றும் சமூக நல கூட்டமைப்பு புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் மாடியில் உள்ள ஒரு தனியார் மினி அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு பட்டுக்கோட்டை வழக்கறிஞர் செல்வராசு தலைமை வகித்து, கூட்டமைப்பை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் ஆலோசகர் பொறியாளர் சிற்பிசேகர் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் தலைவர் முனைவர் தாய்பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அறம் முகமது யஹ்யா, நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட பொருளாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டமைப்பினை வாழ்த்தி சிறப்புரையாற்றினர்.
விழாவில் ஏழை, எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் மிகவும் நலிவடைந்த ஆதரவற்ற கிராம மக்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், செயற்குழு
உறுப்பினர்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொள்ள முடியாத பயனாளிகளுக்கு பொறுப்பாளர்கள் அவர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். முடிவில் துணைத்தலைவர்
ராஜகோபால் நன்றி கூறினார்.