கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை பெற தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள், சீருடைகள் 1 முதல் 5 வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
டிட்டோ ஜாக் அமைப்பினரின் 13 அம்ச கோரிக்கைகளில், 5 அல்லது 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அந்த அமைப்பினருடன் முதன்மைச் செயலரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்கள் கூறி ஏன் நிறுத்தப்பட்டது என்றும், ஏறத்தாழ 60 லட்சம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். மத்திய அமைச்சரிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை பார்த்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.