பேராவூரணி மீன் மார்க்கெட்டில் வாவல் மீன் கிலோ ரூபாய் 1, 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீன்களில் சுவை மிகுந்ததும், ஏற்றுமதி தரம் வாய்ந்ததுமாக வாவல் மீன் கருதப்படுகிறது. பேராவூரணி பகுதியில் குளத்து மீன்களை விட கடல் மீன்களையே பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி சமைத்து உண்கின்றனர். இந்நிலையில் பேராவூரணி பகுதிக்கு சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது பாறை மீன் 500 ரூபாய்க்கும், முரல் மீன் 400 ரூபாய்க்கும், கிழங்கன் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாவல் மீன்கள் குறைந்த அளவே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த வகை மீன்கள் கிலோ 1000 முதல் 1200 ரூபாய் வரை தரத்திற்கு தகுந்தார் போல் விற்பனை செய்யப்படுகிறது. சுவை மிகுந்த வாவல் மீன்கள் குழம்பு வைப்பதற்கும் வறுவலுக்கும் சுவையாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அதேபோல் நண்டு, இறால், கணவாய் உள்ளிட்ட மீன்கள் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. அதேபோல் சாலை ஓரக் கடைகளில் குளத்து மீன்களான கெண்டை, கெளுத்தி, ஜிலேபி உள்ளிட்ட மீன்களும் சுவை மிகுந்த குளத்து விரால் மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதனையும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.