தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் உறவினர்கள் 3 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். பேராவூரணி அருகே உள்ள சித்துக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ் ணன்(48). திமுக கிளை செயலர், அரசு ஒப்பந்ததாரர். கடந்த 14 ஆம் தேதி இரவு இவரது வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்றது தொடர்பாக திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் சேரன் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட எஸ். பி. , பட்டுக்கோட்டை டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், மதுக்கூர் காவல் உதவி ஆய்வாளர் ராம் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் திருச்சிற்றம்பலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சித்துக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து, சித்துக்காடு வடக்கு ரவிக்குமார் (39), சிவனேசன் (22), அஜய் குமார் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறையில் அடைத்தனர்.
திமுக பிரமுகர் வீட்டில் உறவினர்களே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.