தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர் நூரியா தெருவில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். மழை பெய்து 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் அந்தப் பகுதி மழை நீர் முழுவதும் வடியாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தும் பொதுமக்கள், குடியிருப்பு பகுதிகளை 10 நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ளதால், தேங்கியுள்ள மழை நீரின் நிறம் மாறி பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக காட்சியளிப்பதாகவும், தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன், விஷ ஜந்துக்கள் கலந்து அந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், அவசர உதவிக்கு மருத்துவரிடம் செல்வதற்கு வாகனங்கள் கூட உள்ளே செல்வதற்கு வழியில்லாமல் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.