தஞ்சாவூர் - சோழபுரம் இடையே சாலைப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, அதில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் பாபநாசம் அருகே வேம்புக்குடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2024-2025ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ. 340, மாதாந்திர கட்டணம் பாஸ் தேவைப்படுவோர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அணுக வேண்டும் எனவும், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தஞ்சாவூர் - விக்கிரவாண்டி திட்ட இயக்குநர் செல்வகுமார் கூறுகையில்: தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலையில், தற்போது தஞ்சாவூர் - சோழபுரம் இடையே முழுமையாக பணிகள் நிறைவடைந்து, அதில் வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் பாபநாசம் அருகே வேம்புக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.