தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராராமுத்திரை கோட்டை கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கிட பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், மற்றும் ஜீப் ஓட்டுநர் கணேஷ் உடன் ஸ்தல ஆய்வு பணி மேற்கொண்டனர். பின்னர் அப்பணியை முடித்துவிட்டு கிளம்பும்போது மணல் ஏற்றி வந்த லாரியில் வந்தவர்கள் மணல் கடத்தல் லாரியை பிடிக்க வருவதாக கருதி அரசு ஜீப்பின் மீது இடிக்கும் வகையில் வேகமாக வந்தனர். அப்போது ஜீப்பில் இருந்த அரசு அதிகாரிகள் நூலிலையில் உயிர் தப்பினார்கள். பின்னர் அந்த வாகனத்தை பிடிக்க முயன்றபோது சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை நிறுத்தாமலும், வட்டாட்சியர் வாகனத்தை இடிக்கும் வகையில் அச்சுறுத்தியும் இருசக்கர வாகனம் மூலம் வட்டாட்சியர் வாகனத்தினை முன்னேற விடாமல் இருவர் தடுத்துள்ளனர். பின்னர் அந்த லாரியை சுமார் ஒரு மணி நேரம் போராடி குளிச்சப்பட்டு என்ற இடத்தில் நிறுத்த முயன்ற போது லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் மணல் லாரியை கைப்பற்றி அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.