பாபநாசம் தாலுக்காவன்னியடி, மணல்மேடு, உட்பட சுற்றுபுற கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை, வாழை மற்றும் நெல் உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையினால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. சம்பந்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை எனவும், கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தூர்வாரப்படாத வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வலியுறுத்தியும், வடிக்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராஜகிரி மெயின் சாலையில் அமர்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை வட்டாட்சியர் பிரபு, பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் சகாய அன்பரசு, மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் சுந்தரேசன், அனிதா, ராஜதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்புசாமி, சதீஷ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.