தஞ்சாவூர் அருகே எலெக்ட்ரீஷியன் வாகன விபத்தில் படுகாயமடைந்தவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
தஞ்சை அருகே மெலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் மாதவன் (19). இவர், தனது ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தினமும் தஞ்சைக்கு வேலைக்கு வருவது வழக்கம். அதன்படி கடந்த 11-ம் தேதி மெலட்டூரில் இருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
பாபநாசம் மெயின் ரோட்டில் வந்தபோது எதிர்பாராதவிதமாக வாகன விபத்து ஏற்பட்டது. இதில் மாதவன் படு காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மாதவனை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மின் நண்பர்கள் நல இயக்கம் சார்பில் ரூ. 10 ஆயிரம் மாதவனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. அப்போது மாநிலத்தலைவர் சோமு, மாநில செயலாளர் பழனிச்சாமி, லெட்சுமணன், முகமது யாசின் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.