தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திப்பன்விடுதி -நரங்கியப்பட்டு செல்லும் பகுதியில் வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்றபோது அங்கு ஒரு நபர் நாட்டுத் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த நபர், துப்பாக்கியை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார், நாட்டுத்துப்பாக்கியை வாட்டாத்திக் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், போலீசார் கைப்பற்றிய நாட்டுத்துப்பாக்கி மூலம் ஒரு நபர் பறவைகளை வேட்டையாடியதும், போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இது குறித்து வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.