தஞ்சாவூர்: இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்கமளிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகளின் பாலின் விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்து 2 வது பெண் குழந்தை பிறந்த தேதியில் இருந்து 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பெண் குழந்தைகளின் பிறப்புச்சான்று அசல், குடும்ப கட்டுப்பாடு சான்றிதழ் அசல், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், குடும்பப் புகைப்படம், பெற்றோர்களின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை இணைக்க வேண்டும். வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும், குழந்தைகளின் தாய் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் அரசு இ- சேவை மையத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்களுக்கு பயனாளர்கள் தங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் தொடர்பாக ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்