தஞ்சை: சாலையில் திரியும் கால்நடைகள் பறிமுதல் மாநகராட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலும் சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பிடிக்கப்படும் கால்நடைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 151 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ. 7 லட்சத்து 9 ஆயிரம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் குறித்த புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளன. கால் நடை வளர்க்கும் உரிமையாளர்கள் கால்நடைகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் பராமரிக்க வேண்டும் அவ்வாறு பராமரிக்கப்படாமல் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், உரிமையாளர்களற்ற கால்நடைகளாக கருதப்படும். பிடிபடும் கால்நடைகள் எக்காரணம் கொண்டும் திருப்பி வழங்கப் படமாட்டாது. கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு யாரும் உரிமை கோரக்கூடாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.