ஒரத்தநாடு அருகே ஆற்றில் மிதந்த ஆண், பெண் சடலம்
ஒரத்தநாடு அருகே ஆறுகளில் ஆண், பெண் சடலமாக மிதந்து வந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேல உளூர் கல்லணை கால்வாய் ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் ஒரத்தநாடு காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஒரத்தநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஓரத்தநாடு அருகே உள்ள பருத்திகோட்டை கிளைவாய்க்காலில் 25 வயது மதிக்கத் தக்க இளைஞரின் சடலம் ஒன்று ஆற்றில் மிதந்து வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஓரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சாவூர் பூக்கார தெரு மணிமாறன் மனைவி சந்திரா (44) என்பதும், மற்றொருவர் தஞ்சாவூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த சசிகுமார் மகன் ராகுல் (25) என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் ஆற்றில் குளிக்க வந்தபோது தவறி விழுந்து இறந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.