தஞ்சை பூக்காரத் தெரு சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா
தஞ்சாவூர் பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், உற்சவர் சுப்பிரமணியசுவாமி, வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள இசை முழங்க, மயில் சின்னம் அச்சிட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று மான் வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்றது. இன்று (திங்கள்கிழமை) பூத வாகனத்திலும், நாளை யானை வாகனத்திலும், 6ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி வீதியுலாவும் நடைபெறவுள்ளன. முக்கிய நிகழ்வான 7ம் தேதி இரவு 7 மணிக்கு ஆடு, மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பட்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8ம் தேதி திருக்கல்யாணமும், 9ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 10ம் தேதி திருத்தேரும், 11ம் தேதி தீர்த்தவாரியும், 12ம் தேதி விடையாற்றியும் நடைபெற உள்ளது.