தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான இளங்கல்வியியல் பட்டம் (பி.எட்) மற்றும் கல்வியில் நிறைஞர் பட்டம் (எம்.எட்) பயில்வதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. நேரடி சேர்க்கையை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் பாரதஜோதி தொடங்கி வைத்தார். மாணவி அபிநயா முதல் நேரடி சேர்க்கையை பெற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை பேராசிரியர் ஆனந்தராசு, உதவிப்பேராசிரியர் நளினி, உதவியாளர்கள் சக்திசரவணன், கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். மேலும் விண்ணப்பம் பெறும் அனைத்து மாணவர்களும் உடனடி சேர்க்கை பெறலாம். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம் மற்றும் கல்வியில் நிறைஞர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் உரிய நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்பட்டு அதே கல்வியாண்டில் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வாய்ப்புகளும் உருவாக்கி தரப்படுகிறது என பதிவாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.