வங்கி கணக்கில் ரூ. 756 கோடி இருப்பதாக
இளைஞருக்கு வந்த குறுஞ்செய்தி
தஞ்சாவூர், அக். 6 – தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அவரது வங்கி கணக்கில் இருப்பு தொகையாக 756 கோடி ரூபாய் உள்ளதாக வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (29), இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கோடக் மஹிந்திரா வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில், கணேசன் வியாழக்கிழமை இரவு தனது நண்பர் ஒருவருக்கு தனது கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதன் பிறகு வெள்ளிக்கிழமை காலை வங்கியில் இருந்து கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தியில் அவரது கணக்கில், 756 கோடி ரூபாய் இருப்பு உள்ளது போல் இர்ந்த தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து கணேசன் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று, ஊழியர்களிடம் வந்த குறுஞ்செய்தியைக் காட்டி கேட்டுள்ளார். அவர்கள் விசாரித்து விட்டு போன் செய்வதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனால் கணேசன் தனது கணக்கில் பணம் தொடர்பாக ஆய்வு செய்ததில், அதில் 756 கோடி ரூபாய் பணம் இருப்பதாக காட்டவில்லை. அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியுள்ளது. இந்த குறுஞ்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.