தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலில் உள்ள சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன்பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று பல்வேறு சன்னதிகளில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு எடுத்துவரப்பட்டது.
அங்கு இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹம்சன், உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ், மேற்பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.41,98,874 கிடைத்தது. மேலும் 18 கிராம் தங்கமும், 265 கிராம் வெள்ளியும் கிடைத்தது.