கீழணை அணைக்கு சம்பா பருவ பாசனத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கீழணையில் இருந்து 1. 5 லட்சம் ஏக்கர் பரப்பில் பாசன வசதி பெற்று சாகுபடி செய்து வருகிறோம். கல்லணையில் இருந்து கீழணைக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவில் 10 சதவீத தண்ணீர் தர வேண்டும். ஆனால் கீழணைக்கு தண்ணீர் வருவதில்லை. பல்வேறு முறையீடுகள் செய்தும் தண்ணீர் வந்த பாடு இல்லை. குறிப்பாக
இந்த காலகட்டத்தில் நாற்றை பறித்து நடவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
அதேபோன்று நேரடி நெல் விதைப்பு செய்த பயிர்களுக்கு தண்ணீர் வைத்து களை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகிறது. இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கு பெரிய நெருக்கடி நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக திருச்சி முதன்மை பொறியாளர் எங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பது விவசாயிகளுடைய கோரிக்கையாக உள்ளது.
நிறைவேற்ற தவறினால் விவசாயிகள் திருச்சி முதன்மை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.