பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரன்கொல்லை கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சூரன்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை முளைப்பாரி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் முளைப்பாரியை வைத்து கோலாட்டம், கும்மி கொட்டி நடனம் ஆடினர். பின்னர் பெண்கள் முளைப்பாரியுடன் கோவிலை சுற்றிவந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.