பாபநாசம்: கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் திருவிழா தொடங்கியது

69பார்த்தது
பாபநாசம்: கர்ப்பரட்சாம்பிகை கோவிலில்  திருவிழா தொடங்கியது
பாபநாசம் தாலுகா திருக்கருகாவூரில் எழுந்தருளி குழந்தைபேறுக்கான பிரார்த்தனை தலமாகவும், கருவுற்ற பெண்கள் கருவை காத்து கரு காத்த நாயகியாகவும் அருள்பாலித்து வரும் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெள்ளிப் பல்லக்கில் சுவாமி-அம்பாள் புறப்பாடும், 4-ம் தேதி இரவு ஓலைச்சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும், 8-ம் தேதி காலை தேரோட்டமும், 9-ம் தேதி காலை தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது. விழாக் காலங்களில் தினசரி சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவும், தினசரி ஆன்மிக சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயலாளர் விக்னேஷ் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், விழாக்குழுவினர், கிராமம் மக்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி