டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் விதை நெல் உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் குறுவை தொகுப்பு திட்டம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை திறக்க இருப்பதால் சாகுபடிக்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடிக்கு மேல் நீடித்து வருவதால் பாசனத்திற்கு தண்ணீர் தடை இன்றி கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 6.5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் குறுவையில் உரம், விதைநெல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதுடன் பயிர் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரம், பூச்சி மருந்து தட்டுப்பாடு இன்றி கிடைப்பதுடன் சரியான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.