கும்பகோணத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 40). இவர் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் பித்தளை பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் முத்துகுமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 28-ம் தேதி காலை முத்துகுமார் கடையை திறந்துள்ளார். தொடர்ந்து அவர் கடையின் கல்லாவை திறந்து பார்த்த போது அதில் இருந்த பொருட்கள் இடமாறி இருந்ததுடன் பணம் மாயமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து முத்துகுமார் கடையில் கல்லாவில் இருந்த ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் கும்பகோணம் பழைய அரண்மனை தெருவை சேர்ந்த அகிலன் (20), ஹரிகிருஷ்ணன் (20), பிரசன்னா (19), வன்னாங்கன்னி மற்றும் மேட்டுத்தெரு பகுதிகளை சேர்ந்த இரண்டு 17 வயது சிறுவர்கள் ஆகிய 5 பேரும், கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கோவாவில் இருந்து தமிழகம் வருவதை அறிந்த தனிப்படை போலீசார் அவர்களை சென்னையில் கைது செய்து கும்பகோணத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து ரூ. 2.51 லட்சம், 3 மோட்டார் சைக்கிள்கள், 5 மொபைல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.