கும்பகோணம் மகாமகப்பெருவிழாவில் தொடர்புடைய 12 சிவன் கோவில்களில் ஒன்று பாணபுரீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பிரமோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த பிரமோற்சவம் கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை பல்லக்கு, இரவு இந்திர விமானம், சூரியபிரபை, அம்பாள் சந்திர பிரபை, பூதம், கிளி, காமதேனு, ரிஷபம், ஓலைச்சப்பரமும் நடந்தது.
கடந்த 6ஆம் தேதி மாலை திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் காலை கட்டுத்தேர் திருத்தேரோட்டமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், காவிரி பகவத் படித்துறையில் வைகாசி விசாக தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரஞ்சிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.