தஞ்சாவூர் கால்நடைப் பன்முக மருத்துவமனையில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், உலக வெறிநோய் தினம் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து சனிக்கிழமை துவக்கி வைத்தார்.
இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு, மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது;
ரேப்டோ என்னும் குடும்பத்தை சார்ந்த ஒரு வைரஸ் வெறிநோய்க்கு காரணமாகும். இது மனிதர்களிலும் விலங்குகளிலும் இறப்பை ஏற்படுத்தக்கூடியது. இது நாய், பூனை, ஓநாய், நரி, வௌவால் போன்றவற்றின் உமிழ்நீரிலிருந்து பரவுகிறது. இந்த விலங்குகள் மனிதர்களை கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக வைரஸ் உடலுக்குள் சென்று பன்மடங்கு பெருகி நரம்பு மண்டல வழியாக மூளையை தாக்கும். ரேபிஸ் வைரஸால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்து விட்டால் உடனடியாக நோய் தடுப்பூசிகள், மருத்துவ நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். நாய் கடித்தவுடன் 5 தடுப்பூசிகளை உரிய காலத்தில் செலுத்திக் கொண்டால் 100 சதம்
நோயை தவிர்க்கலாம்.
அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் காலை 8 முதல் 12 வரை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது" என்றார்.