தஞ்சாவூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் இன்று (ஜனவரி 4) அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்திலிருந்து துவங்கி, பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா, வல்லம் பெரியார் சிலை வரை சென்றடைந்து மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் வரை நடத்தப்பட்டது.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் சுமார் 250 மாணவர்களும், 150 மாணவியர்களும் என மொத்தம் 400 பேர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் முதல் முன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ. 5000/-, ரூ. 3000/-, ரூ. 2000/- வீதமும், 4 முதல் 10-ஆம் இடம் வரை வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ. 250/- வீதம் காசோலை மொத்தம் ரூ. 70,500/- வழங்கப்பட்டது.