கபிஸ்தலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வில்லங்கச்சான்று கேட்டு சுவாமிமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், வில்லங்கச் சான்று வழங்க தலைமை எழுத்தர் பத்மஸ்ரீ 1500 லஞ்சம் கேட்டுள்ளார். ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் மீதம் 500 ரூபாய் கொடுத்தால் தான் சான்று வழங்குவேன் என விடாப்படியாக கூறி அவரை பலமுறை அலையவிட்டுள்ளார்.
இதனால் வேதனை அடைந்த விவசாயி இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில், ஆய்வாளர்கள் அருண் பிரசாத், பத்மாவதி , சரவணன் உள்ளிட்ட பத்துபேர் கொண்ட குழுவினர் இன்று சுவாமிமலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு புகார் அளித்த விவசாயியிடம் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டை கொடுத்து, அனுப்பிவிட்டு அவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது 500 ரூபாய் நோட்டை பத்மஸ்ரீ, தன்னுடைய ப்ரோக்கர் போல் வைத்துள்ள அதை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மகாலிங்கம் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அப்போது அவரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்தவுடன், விவசாயியுடன் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பத்மஸ்ரீ மற்றும் மகாலிங்கம் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
தற்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.