தென்காசி மாவட்டம் கடையம் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை ராமநதி அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஆசிரியர் அந்தோணிராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்து, அவரது வளர்ப்பு நாயைக் கொன்று கவ்விச் சென்றுள்ளது.
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஊரை ஒட்டிய பகுதிக்குள் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அதிகாலையில் இந்தப் பகுதி வழியாகத்தான் விவசாய பணிகளுக்கும், அணைக்கட்டு கால்வாயில் குளிப்பதற்கும், நடைபயிற்சிக்கும் ஏராளாமானவர்கள் சென்று வரும் நிலையில் தற்போது சிறுத்தை புலி நடமாட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.