தென்காசி மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு பொதுப்பணித்துறையினர் அரசு கட்டிடங்கள், சாலையோரங்களில் உள்ள மரம் மின் கம்பி ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதுபார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் அன்றாடப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் தேவையான மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இறப்புகள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து நிவாரண உதவி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறு குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து கண்காணித்திடவும் குளங்களின் கரை பகுதிகள் வலுவாக இருப்பதை உறுதிபடுத்திட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் (Mock Drill) பயிற்சி வழங்கிட வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கழிவு நீர், மழை நீர் தேங்காமல் கழிவு நீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும். மழை காலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடி தண்ணீரில் குளோரின் கலந்த குடி தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் அவர்கள் தெரிவித்தார்.