தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய பகுதிகளில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமிராக்களின் கட்டுப்பாட்டு மையத்தை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார். தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு மையத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேற்று துவங்கி வைத்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது உள்ள நவீன காலத்தில் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிக் கொடுப்பதிலும் கண்காணிப்பு கேமிராக்கள் மூன்றாவது கண் போன்று செயல்படுகிறது. மேலும் குற்றங்களைத் தடுப்பதிலும் கண்காணிப்பு கேமிராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அனைத்து பொதுமக்களும் தங்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தெருக்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை அதிக அளவில் நிறுவ வேண்டும்.
மேலும் தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் 1,285 கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுரண்டை காவல் நிலைய பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்ட 85 கேமிராக்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.