தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் இரவு நேரங்களில் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறார்கள். செல்லும் போது விஷப்பூச்சி கடி பிரச்சனைகள் நேரிடுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மத்திய மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்குநர் என்ற திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து கைப்பேசியின் மூலம் இயக்கவும் நிறுத்தவும் உதவுகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் வகுப்பினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 7000/- மற்ற இதர விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5000/- மானியமாக வழங்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருக்கும் உதவி பொறியாளர்களிடம் அல்லது உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை) அலுவலகத்தை நேரிலோ அல்லது 7904025547 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.