தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரண்டாம் கட்டமாக பாதம் பாதுகாப்பு மருத்துவ மையத்தினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் நரம்பு மற்றும் ரத்தக்குழாய் பாதிப்பினால் கால் விரல் மற்றும் கால் அகற்றுவதை தடுப்பதற்காக, தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான பாதம் காப்போம் மையம் பாதுகாப்பு மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நரம்பு பாதிப்பை கண்டறிய vibration sensation test எனப்படும் பரிசோதனை, ரத்தக்குழாய் பாதிப்பை கண்டறிய Doppler ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இம்மையத்தில் கண்டறிந்து குணமடைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மருத்துவர். பிரேமலதா, மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர்கள் சொர்ணலதா, விஜயகுமார், செவிலிய கண்காணிப்பாளர்கள், மருந்தாளுநர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.