தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர். தலைமையில் நேற்று நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2-பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் தலா ரூ. 13, 500/- வீதம் மொத்தம் ரூ. 27, 000/- மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் வழங்கினார்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 603 மனுக்கள் பெறப் பட்டது.
மனுக்கள் மீது விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், தென்காசி மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குருவம்மாள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல் காதர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், மாவட்ட மேலாளர் தாட்கோ ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.