தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அறிவுரையின் பேரில், புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் குமார் மேற்பார்வையில் தனிபடை காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் ஏட்டுகள் கண்ணன், சந்தன பாண்டியன், செய்ய தலி, அழகு துரை, சுந்தராஜ், கருப்பசாமி ஆகியோர் நேற்று இரவு சிவகிரி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உருளைக்கிழங்கு மூட்டைகளுக்கு இடையே 15 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கஞ்சாவுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் வந்த தென்காசி மாவட்டம் புளியங்குடி கற்பக வீதி இரண்டாவது தெருவை சேர்ந்த அய்யனு மகன் முருகானந்தம் (வயது 29), கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கைதமன பரம்பு பகுதியைச் சேர்ந்த பஷீர் மகன் ஷியாஸ் ( 27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 35 லட்சம் இருக்கும். கஞ்சாவை ஒடிசா மாநிலம் குனுப்பூர் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.