ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை அடிக்கும். குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
குற்றாலத்தில் ஏற்படும் இதமான குளிர்ந்த சூழ்நிலையை அனுபவிக்கவும், மெல்லிய சாரல் மலையில் நனையவும், அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் வந்து குவிந்து விடுவார்கள். அதன்படி குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழைனால் நேற்று முன்தினம் மாலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இரவில் தண்ணீர் வரத்து அதிகரித்து அதுவே வெள்ளப்பெருக்காக மாறியது.
இதனால் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார தடை விதித்தனர்.