தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாலிபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் தொடர்ச்சியாக சாகசம் செய்தும் அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கியும் அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நாகூர் கனி என்பவரின் மகன் செய்யது சுலைமான் தாதா பீர் (22),
தென்காசி ஜம்ஜம் நகர் சையது சுலைமான் என்பவரின் மகன் முகமது தெளபிக் (21), தென்காசி மாதா கோவில் ஒன்றாம் தெரு புவனேச பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் (21) என தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் பிடிபட்ட மூன்று பேருக்கும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ. 10, 000ம் அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மூவருக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.