கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் குத்தாலிங்க ராஜன் (எ) கோபி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மகேஸ்வரி மற்றும் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதுடன் துணைத்தலைவர் தலைமை யில் 10 உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து துணைத்தலைவர் தலைமையில் போட்டி கூட்டம் நடத்தினர்.
இதில் உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, இந்திரகுமார், செல்வி, சூரியராஜ், செல்வமேரி, கனியம்மாள், தமிழ்செல்வி, பத்திரகாளி, ராஜாசிங், பொன்மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும், கடந்த 28-6-24 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 12 உறுப்பினர் கலந்து கொள்ளாத நிலையில், 3 உறுப்பினர்களை மட்டும் வைத்து ஊராட்சி சட்டத்திற்கு எதிராக நடத்திய ஊராட்சி மன்ற கூட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீர்மான நகலினை வழங்கி, நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை மனுவினை அளித்தனர்.